கோடை கால விடுமுறையை ஒட்டி சென்னை - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் பண்டிகை காலங்கள், விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில், கோடை கால விடுமுறையை ஒட்டி சென்னை - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோடை கால விடுமுறைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவர் அல்லது சுற்றுலாத் தளங்களுக்கு செல்வர்.
இதனால், ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்க்கும் பொருட்டும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் பலாப்பழத்தை சுமக்கும் ஓபிஎஸ்: வைகை செல்வன் சாடல்!
அதன்படி, ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து வியாழக்கிழமைகளிலும் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கு கிளம்பும் ரயில், மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை (சனிக்கிழமை) 7.10 மணிக்கு நெல்லை வந்தடையும்.
நெல்லையில் இருந்து, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.