
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் நகர் மட்டப்பாறை பகுதியில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு (65). குறவர் சமூகத்தை சேர்ந்த சாமிகண்ணுக்கும் குப்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் குப்பு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பரமேஸ்வரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சாமிக்கண்ணு. இவர்களுக்கு மூன்று மகள்களும், வீரபுத்திரன் என்ற மகனும் பிறந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே திருமணம் ஆன மலர் என்பவரை சாமிக்கண்ணு மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். மலர் அவரது மகன் அய்யனார்(22) அவரது மகள் ஆகியோர் சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
விபத்து காப்பீடு தொகை
மேலும் இரண்டாவது மனைவி பரமேஸ்வரி என்பவரின் மகன் வீரபத்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். அவரது விபத்து காப்பீடு தொகையாக சுமார் 8 லட்சம் ரூபாய் நிவாரணம் அவரது தாய் பரமேஸ்வரி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது மனைவி மலர் என்பவரின் மகன் அய்யனார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தனது உறவினரான 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கி கருவை கலைத்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வருகின்றார்.
தந்தை கொலை
இதனால் தந்தை சாமிக்கண்ணுவிடம் வழக்கு நடத்த ரூபாய் 2 லட்சம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். ஆனால் சாமிக்கண்ணு இடம் வாங்கி வீடு கட்டி விட்டேன் அதனால் பணம் இல்லை என்று கூறிவிட்டாதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அய்யனார் நேற்று இரவு சென்னை பல்லாவரத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் மேல்மலையனூர் பகுதிக்கு வந்து நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை சாமிக்கண்ணு தலையில் கட்டப்பாறையால் பலமாக அடித்ததில் சாமிக்கண்ணு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
3வது மனைவியின் மகன்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி டி.எஸ்.பி மனோகரன் தலைமையிலான மேல்மலையனூர் போலீசார் சாமிக்கண்ணு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அய்யனாரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் தராத தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.