
தமிழ்நாட்டின் காவல்துறையை நேரடியாகத் தாக்குவது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு விடப்பட்ட நேரடியானச் சவாலாகும் என வேல்முருகன் கொந்தளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டின் இளைஞர்கள் கல்வி கற்று, பட்டம் பெற்றும் வேலை இன்றித் தவிக்கும் வேதனையை, நாம் தினமும் கண்டு வருகின்றோம். ஆனால், குறைந்த கூலி என்ற பெயரில் வடமாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் சூழ்ச்சித் தீவிரமாக நடைபெறுகிறது. தமிழர்களின் வாய்ப்புகளைப் பறித்து, தமிழரின் வாழ்வுரிமையை மிதிக்கின்ற இந்தச் சதியை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை எச்சரித்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கிற்கு விடப்பட்ட நேரடி சவால்
ஒன்றிய அரசின் தமிழர் விரோத கொள்கையும், திட்டமிட்டு வடமாநிலத்தவர்களை குடியேற்றும் அரசியலும், நாளுக்கு நாள் தமிழரின் வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் அனைத்தையும், சுரண்டுவதற்காகவே செய்யப்படுகின்றன. அதற்குச் சான்றாகவே, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில், நேற்று வடமாநிலத்தவர்கள் கூட்டமாகக் குவிந்து, காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு சென்றுள்ளதை பார்க்கிறோம். தமிழ்நாட்டின் காவல்துறையை நேரடியாகத் தாக்குவது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு விடப்பட்ட நேரடியானச் சவாலாகும். இந்தக் கொடூரச் செயலைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கடுமையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின் காவல்துறையைத் தாக்கியுள்ள, இந்த வன்முறை இன்னும் தொடருமானால், நாளை தமிழ்நாட்டு மக்களின் உயிரும், உரிமையும் அபாயத்தில் சிக்கிக்கொள்ளும் என்பதை, இந்தச் சம்பவம் வெளிப்படையாக எடுத்துக் காட்டுகிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை
தமிழக அரசு, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடுமையானச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டம் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும். நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள உள்நுழைவுச் சட்டம், தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் இங்கே பணி செய்து வரும் வட மாநிலத்தவர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகுக் குடியேறிய வடமாநிலத்தவர்களுக்கு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்க கூடாது என்பதையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் வலியுறுத்துகிறது.
மக்கள் இனி ஒருபோதும் சகிக்க மாட்டார்கள்
தமிழரின் வேலைவாய்ப்பு, வாழ்வுரிமை, வாக்குரிமையைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிகளையும், திட்டமிட்ட வடமாநிலத்தவர்களின் குடியேற்ற அரசியலையும், தமிழ்நாட்டு மக்கள் இனி ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமை, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றை காக்க, எங்களின் போராட்டம் மேலும் தீவிரமாகவும் தளர்ச்சியின்றியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார்.