
மதுரைக்கு அருகே உள்ள மலைவாசஸ்தலம் என்றால் உடனே நினைவுக்கு வருவது கொடைக்கானல். ஆனால் அதற்கு இணையாக, இன்னும் அதிகம் அறியப்படாத, அமைதியான ஒரு அழகான இடத்தை பற்றி பார்க்கலாம். நான் இங்கே குறிப்பிடுவது சிறுமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை, 'மலைகளின் குட்டி இளவரசி' என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.
'மலைகளின் குட்டி இளவரசி' சிறுமலை
கொடைக்கானல் மற்றும் ஊட்டியைப் போலவே, சிறுமலையிலும் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான, இதமான காலநிலை நிலவும். பசுமையான காடுகள், செடிகள் மற்றும் கொடிகள் சூழ்ந்த இந்த இடம், நகர வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விடுபட்டு மன அமைதியைத் தேடுவோருக்கு ஒரு வரப்பிரசாதம். இங்குள்ள குளிர்ந்த காற்று உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி தரும். மேலும், உள்ளூர் மலைவாழ் மக்களால் பயிரிடப்படும் வாழை, மிளகு, பலாப்பழம் போன்றவற்றை இங்கு காணலாம்.
அழகான 18 கொண்டை ஊசி வளைவுகள்
சிறுமலைக்குச் செல்லும் பாதையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நான்காவது அல்லது ஐந்தாவது வளைவைத் தாண்டும்போதே குளிர்ந்த காற்று உங்களை வரவேற்கும். வானுயர மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் பயணிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். இங்கு குரங்குகள் மட்டுமின்றி, காட்டு மாடுகள், கடமான், கேளையாடு, முயல், கழுதை, காட்டு அணில் போன்ற வனவிலங்குகளையும் காணலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் காட்டு மாடுகளைக் கூட பார்க்கலாம்.
சிறுமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?
சிறுமலை ஏரி: இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை ஏரி. இங்கு படகு சவாரி செய்து இயற்கையின் அழகை ரசிக்கலாம்.
சந்தான கிருஷ்ணர் கோயில்: சந்தன மரத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை இங்கு பிரசித்தி பெற்றது. இயற்கை அழகை ரசித்துவிட்டு, இந்த ஆன்மீக தலத்திற்கும் சென்று வரலாம்.
அன்னை வேளாங்கண்ணி ஆலயம்: பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், அமைதி தேடுவோருக்கு ஏற்ற இடம்.
அகஸ்தியர்புரம் காட்சிமுனை (டவர்): பள்ளத்தாக்கின் மொத்த அழகையும், பசுமையான வனங்களின் பிரம்மாண்டத்தையும் இங்கிருந்து பார்க்கலாம். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.
ஊட்டி, கொடைக்கானல் போல அதிக கூட்டம் இல்லாததால், சிறுமலையின் இயற்கையை முழுமையாக அனுபவிக்க முடியும். இங்குள்ள மூலிகைக் காற்றை சுவாசிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. டிரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான இடம். மேலும், சிறுமலை அதன் சுவையான பலாப்பழம் மற்றும் வாழைப்பழங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வரும்போது அவற்றை ருசிக்க மறக்காதீர்கள்.
சிறுமலைக்கு எப்படி செல்வது?
சாலை மார்க்கமாக: சிறுமலை திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னை அல்லது பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் திண்டுக்கல் வந்து, அங்கிருந்து நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தைக் கடந்து, வலதுபுறம் திரும்பி சிறுமலைக்கு செல்லலாம். இருசக்கர வாகனம் அல்லது காரில் செல்வது சிறப்பான அனுபவத்தைத் தரும். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சிறுமலைக்கு அரசுப் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுகின்றன.
ரயில் அல்லது விமானம் மூலம்: சென்னையிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் சிறுமலைக்குச் செல்லலாம். மதுரையில் இருந்து விமானம் மூலம் வந்தும் வாடகை வண்டிகளைப் பயன்படுத்தலாம்.
தங்குமிட வசதிகள்: சிறுமலையில் விடுதிகள் (லாட்ஜ்கள்) மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன. மதுரை, திண்டுக்கல்லில் வசிப்பவர்கள் அதிகாலையில் புறப்பட்டால், சிறுமலையை சுற்றிப் பார்த்துவிட்டு அன்றைய இரவே திரும்பிவிடலாம்.