குற்றால அருவியில் குளிக்க வந்த மலைப்பாம்பு !! அலறி அடித்து ஓடிய பெண்கள் !!

By Selvanayagam PFirst Published Dec 31, 2018, 10:55 AM IST
Highlights

குற்றாலத்தில் பெண்கள் குளிக்கும் அருவிப் பகுதிக்கு திடீரென மலைப்பாம்பு  ஒன்று வந்ததால் பொது மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அழகிய மலைகள் சூழ்ந்த பசுமையான பகுதி. வான் உயர்ந்த மரங்கள், புல்வெளிகள், அருவிகள். ஓடைகள் என ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்தப்பகுதியில் உள்ள மூலிகைகளும் உடல்நலத்திற்கு பெரும் நன்மையை விளைவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுகிறது.

இதனால் இங்கு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஏராளமானோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் ஊர்ந்து வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து குற்றாலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

12 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

click me!