
நீலகிரி
தாளமொக்கை கிராமத்தில் சேறும், சகதியுமாக சாலை உள்ளதால் பள்ளிக்கு நான்கு கி.மீ நடந்து செல்லும் குழந்தைகள் எந்த நேரத்தில் காட்டு யானை தாக்குமோ என்ற பயத்தோடே செல்லும் நிலை உள்ளது. எனவே, தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று ஆதிவாசி மக்கள், ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் (பொறுப்பு) பாஸ்கர பாண்டியன் தலைமைத் தாங்கினார். இதில் மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 77 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் (பொறுப்பு) பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சத்து 76 ஆயிரத்து 745 மதிப்பில் 35 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கொணவக்கரை ஊராட்சி தாளமொக்கை கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “எங்கள் கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த 80–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது மழை பெய்து வருவதால், எங்கள் பகுதியில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
அதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் நான்கு கிலோ மீட்டர் தூரம் மண் சாலை வழியாக நடந்துச் சென்று செம்மனாரை பிரிவு பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று படித்து வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது பள்ளி குழந்தைகளை காட்டு யானை தாக்கும் அபாயம் உள்ளது.
மேலும், அந்த சாலையோரங்களில் புதர்கள் அடர்ந்து வளர்ந்து காட்சி அளிக்கிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையடுத்து அந்த மண் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களை பிரசவ காலத்தின் போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு எந்த வாகனங்களும், குறிப்பாக அவசர ஊர்திகளும் கிராமத்திற்குள் வருவதில்லை. இதனால் பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
எனவே, எங்கள் கிராமத்தில் இருந்து செம்மனாரை பிரிவு பகுதி வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.