அதிமுகவின் வரலாற்றை எழுதி புத்தகமாக வெளியிட்டார் மருத்துவர் ராமதாசு; விரைவில் திமுகவின் வரலாறு?

 
Published : Jul 04, 2017, 07:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
அதிமுகவின் வரலாற்றை எழுதி புத்தகமாக வெளியிட்டார் மருத்துவர் ராமதாசு; விரைவில் திமுகவின் வரலாறு?

சுருக்கம்

Dr. Ramadoss published a book of the history of admk

பெரம்பலூர்

“கழகத்தின் கதை” என்ற பெயரில் அதிமுகவின் வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டார் மருத்துவர் ராமதாசு. அந்தப் புத்தகத்தில் அதிமுகவின் ஊழல் பற்றி விவரித்து எழுதியுள்ளாராம். திமுகவின் வரலாறு எழுத வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

“கழகத்தின் கதை” என்ற பெயரில் அதிமுகவின் தொடக்க காலம் முதல் இன்று வரை உள்ள செயல்பாடுகள் பற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்தப் புத்தக வெளியீட்டு விழா பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார்.

மருத்துவர் ராமதாசு முன்னிலையில் “கழகத்தின் கதை” புத்தகத்தை வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு வெளியிட்டார். மாநிலத் துணைத் தலைவர் திலகபாமா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது மருத்துவர் ராமதாசு பேசியது:

“தமிழகத்தில் ஏன் பிறந்தோம்? என மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு தற்போதைய அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சர்களே ஒருவரையொருவர் குறைகூறி சண்டையிட்டுக் கொள்வது வேதனை அளிக்கிறது. அதிமுகவின் மற்றொரு முகத்தை பற்றி முகநூலில் தான் முதலில் எழுதினேன். அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே அதனை ஒரு புத்தகமாக எழுதினேன்.

50 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிமுகவின் தொடக்க காலம் முதல் இன்று வரை தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், தற்போதைய இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதினேன். மாறாக அரசியல் ஆதாயத்திற்காக இதனை செய்யவில்லை.

இதேபோல் எதிர்காலத்தில் திமுகவின் மற்றொரு பக்கம் பற்றியும் நூல் எழுதுமாறு கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே இலவசங்களை வாரி இறைத்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துள்ளன. எந்த சூழலிலும் திமுக, அதிமுக கட்சிகளுடன் பாமக கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊடகத்தோடு மட்டும்தான் எங்கள் கூட்டணி. ஊடகமும் - அரசியலும் என்கிற பெயரில் சென்னையில் பசுமை தாயகம் சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது.

மது, ஊழல், நிர்வாக திறமையின்மை ஆகியவை இந்த அரசின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இறந்தபோது, அவரது வங்கி கணக்கில் ரூ.100 தான் இருந்தது. ஆனால், தற்போது அமைச்சர்களே கோடிக்கணக்கில் ஊழல் செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே தற்போது மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் சக்தியாக பாமக உருவெடுக்கும்” என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உள்பட பாமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். விழாவில் இறுதியில் அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம் நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!