
நாகப்பட்டினம்
தொடுவாய் மீனவ கிராமத்தில் வளமான எங்கள் ஊரில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் பணிகளுக்கு அனுமதிக்க கூடாது என்று ஆட்சியரிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட்ம, சீர்காழி தாலுகா தொடுவாய் கிராம மீனவ மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், “நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா தொடுவாய் கிராமத்தில் மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. எங்கள் கிராமம் நல்ல சுற்றுப்புற சூழலோடும், சுகாதாரத்தோடும் விளங்கி வருகிறது. எங்கள் கிராமத்தில் ஐந்து அடி ஆழத்தில் நல்ல குடிநீர் கிடைப்பதால், முந்திரி, மா, சௌக்கு உள்ளிட்ட விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அருகில் உள்ள பழையபாளையம், வேட்டங்குடி ஊராட்சி இருவக்கொல்லை, தொடுவாய் கிராமம் ஆகிய இடங்களில் எண்ணெய் கொண்டுச் செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஊர் மக்களிடம் எந்தவித கருத்துக்களையும் கேட்காமல் தன்னிச்சையாக எண்ணெய் கொண்டுச் செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த எண்ணெய் கொண்டு செல்லும் பணிகளால் எங்கள் கிராமத்தில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த பணியால் கடலிலும் குழாய்கள் பதிக்க உள்ளதால் முக்கியத் தொழிலான மீன்பிடி தொழிலும் கடல் வளமும் பாதிக்கப்படும்.
எனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கொண்டு செல்லும் பணிகளுக்கு அனுமதி வழங்க கூடாது” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.