
மதுரை
தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து மதுரையில் உள்ள 178 திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்குகள் தொழிலைச் சார்ந்த ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 30 சதவீதம் கேளிக்கை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சினிமா திரையரங்குகள் நேற்று மூடப்பட்டு, அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 178 திரையரங்குகள் மூடப்பட்டதால் திரையரங்குகள் தொழிலைச் சார்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் மணிவர்மா கூறியது:
ஜி.எஸ்.டி. வரியை வரவேற்கிறோம். அதேசமயம் மாநகராட்சிக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும், ஒரே வரி என்று கூறப்படும் நிலையில், திரையரங்குகளுக்கு மட்டும் கேளிக்கை வரி என்று இரண்டாவது வரி கட்டுவது எவ்வாறு சாத்தியமாகும்?
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 350 திரையரங்குகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது 178 தான் இயக்கப்படுகின்றன. மீதியுள்ள திரையரங்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப திரையரங்குகள் நலிவடைந்து வருகின்றன.
இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் பொழுதுபோக்கிற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பது திரையரங்குகளின் உயிர் நாடியை பறிப்பது போல உள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் திரையரங்குகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் கேளிக்கை வரியால் திரையரங்குகள் உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அதைச் சார்ந்த அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்பது இல்லாத நிலை ஏற்படும். ஆகவே அரசு கேளிக்கை வரியை உடனே ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.