
மதுரை
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை கொண்டுவர வேண்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த பாபு அப்துல்லா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் தமிழக மாணவர்கள் குறிப்பிடப்படும் படியான இடத்தைப் பிடிக்கவில்லை. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கூட நீட் தேர்வில் அவ்வளவாக மதிப்பெண் எடுக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது தான். ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மாணவர்கள் நீட் தேர்வில் எளிதாக வெற்றிப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக கேரளாவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கேரள மாணவர்கள் தேசிய தகுதித் தேர்வுகளில் எளிதாக வெற்றிப் பெறுகின்றனர். கல்வித் துறையில் முதல் இடத்தை அந்த மாநிலம் பிடிக்க இதுவும் ஒரு காரணம். தமிழக பாடத் திட்டங்கள் தேசிய அளவிலான பாடத் திட்டங்களுடன் ஒப்பிடும்படியாக இல்லை.
எனவே, நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு மாணவர்கள் தகுதியடைய, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், இந்த மனு குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 24–ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.