
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அப்பகுதி மக்கள் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள், சிறுவர்கள் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்தும், மது பாட்டில்கள் சாலையில் உடைத்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள நெல்லி கிராமத்தில் இன்று புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடையை சூறையாடினர். இந்தக் கடை குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கப்பட்டதாக கூறி, டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஊர்மக்கள் மது பாட்டில்களை வெளியே எடுத்துப்போட்டு அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.