
வரும் ஜூலை 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் காவல்துறை மானிய கோரிக்கை அன்று அனைத்து உயர் அதிகாரிகளும் அவரவருக்கு பொறுப்பான அலுவலகத்தில் இருக்க வேண்டும் என டிஜிபி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவலர் பணியில் காலிபணியிடங்கள் அதிகமாக உள்ளதாகவும், நிரப்பப்படாமல் இழுக்கடிக்கபட்டு வருவதாகவும்,சமூக வலைதளங்களில் உள்ள காவலர்கள் வெளிப்படையாக கூறி வந்தனர்.
இதையறிந்த டிஜிபி ஜார்ஜ் காவலர்கள் புகார்களுக்கு என்று ஒரு புகார் முறை ஒன்றை கொண்டு வந்தார். அதில் காவலர்களின் புகார்களை மெயில் மூலம் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், குட்கா பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விவகாரத்தில் குட்கா நிறுவன உரிமையாளர்களிடம் சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் விஜயபாஸ்கர் ,டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ,தீயணைப்புத்துறை டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் பணம் பெற்றதாக விபரங்கள் வெளியானது.
இத்தகைய செய்தி ஊடகங்களில் வெளியானதில் இருந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதை தொடர்ந்து வலைதளங்களில் உள்ள காவலர்கள் லஞ்சம் பெற்ற மேலதிகாரிகளை கண்டித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதில், ஜீலை 6 ம் தேதி காவலர்கள் அனைவரும் ஒன்று கூடுவதாகவும், மண்டியிடாத மானம். வீழ்ந்து விடாத வீரம். முடிந்தால் தடுத்து கொள்ளவும். என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், வரும் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் காவல்துறை மானிய கோரிக்கை அன்று அனைத்து உயர் அதிகாரிகளும் அவரவருக்கு பொறுப்பான அலுவலகத்தில் இருக்க வேண்டும் என டிஜிபி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், உயரதிகாரிகளுக்கு கீழ் பணிபுரியும் போலீசார் அனைவரும் காலை 8.30 மணிக்கே காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், யாருக்கும் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை எடுத்தால் அதை கட்டாயம் கவனமாக எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும் எனவும், இதில் தவறேதும் நடக்க கூடாது எனவும் டிஜிபி கூறியுள்ளார்.