
சசிகலா – ஓபிஎஸ் மோதல் விவகாரத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா ஓபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது சசிகலா முதலமைச்சராக விரும்பினார். ஆனால் அதனை எதிர்த்து 12 எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ் போராட்டத்தைத் தொடங்கியதால் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் 122 பேரும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சகல வசதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டனர்.
அப்போது கூவத்தூர் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.போலீசாருக்கும் கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை ராயபுரம் மீனவர்கள் நலசங்கத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டியிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் கடலோர ஒழுங்குமுறை விதியில் இருந்து கூவத்தூர் விடுதிக்கு விலக்கு ஏதும் தரவில்லை என்றும் அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்த கூவத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் நல சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்துஉடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.