
திருவாரூர்
படிப்படியாக இரயில் நிலையங்கள் மூடும் சூழல் ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று தட்சிண இரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் தெரிவித்தார்.
தட்சிண இரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் நேற்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
"18 முதல் 24 பெட்டிகள் கொண்ட 100 கிலோ மீட்டர் வேக விரைவு இரயில் ஒரு இரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நின்று புறப்பட்டால், வேகத்தை குறைத்து இரயிலை நிறுத்தி, மீண்டும் புறப்பட்டு பழைய வேகத்தை எட்டக் கூடுதலாக ஆறு நிமிடம் தேவைப்படுகிறது. இதனால், ஒரு நிலையத்தில் நின்று சென்றால் இரயிலுக்கு நேர இழப்பு குறைந்தது 8 நிமிடம் ஆகும்.
மேலும், 18 பெட்டி இரயிலுக்கு என்ஜினைப் பொருத்த -106 லிட்டர் டீசல் அல்லது 130 கிலோ வாட் மணி மின்சாரமும், 20 பெட்டி ரயிலுக்கு 108 லிட்டர் டீசல் அல்லது 143 கிலோ வாட் மணி மின்சாரமும், 24 பெட்டி என்றால் 118 லிட்டர் டீசல் அல்லது 182 கிலோ வாட் மணி மின்சாரமும் கூடுதலாக தேவைப்படுகிறது. அதுதவிர 8 நிமிட ரயில் கிலோ மீட்டருக்கு இழப்புத் தொகையும் ரயில் நின்று சென்றால் சேர்ந்து விடுகிறது.
கொள்முதல் மற்றும் கையாள்வது சேர்த்து ஒரு லிட்டர் டீசல் ரூ. 77.33 வீதமும், மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 வீதமும் இரயில் என்ஜின் இயக்க தற்போது செலவிடப்படுகிறது. இதனால், ஒரு விரைவு இரயில் ஒரு நிலையத்தில் நின்று செல்ல ஆகும் கூடுதல் செலவு 18 பெட்டியுடன் டீசல் என்ஜினுக்கு ரூ. 21,207, மின்சார என்ஜினுக்கு ரூ. 12,717, 20 பெட்டியுடன் டீசல் என்ஜினுக்கு ரூ. 23,578 மின்சார என்ஜினுக்கு ரூ.12,820, 24 பெட்டியுடன் டீசல் என்ஜினுக்கு ரூ. 24,506 , மின்சார என்ஜினுக்கு ரூ.13,132 செலவு ஆகிறது.
இதனால் ஒரு விரைவு இரயில் ஒரு இரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை வைத்தால், நின்று செல்வதற்கு ஆகும் செலவை விட கூடுதல் வருவாய் அந்த ரயிலுக்கு அந்த நிலையத்தில் இனி இருந்தால் மட்டுமே அனுமதிப்பது என இரயில்வே வாரியம் முடிவு செய்திருக்கிறது.
மேலும், இரயிலுக்கான வசூல் மற்றும் நிலையங்களில் நின்று செல்ல ஆகும் செலவை ஒப்பிட்டு, நின்று செல்லும் இடங்களின் எண்ணிக்கையை தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இரயில்களுக்கு குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது. இது நடப்பு வருவாய் மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை பாதிக்கும்.
எனவே, படிப்படியாக இரயில் நிலையங்கள் மூடும் சூழல் ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிடவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.