ஈவு இரக்கமின்றி சொத்துக்காக பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு...

First Published Feb 21, 2018, 8:16 AM IST
Highlights
Life imprisonment for killing grandma for compassion for riches - court verdict


திருநெல்வேலி

திருநெல்வேலியில் வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்க மறுத்த பாட்டியை ஈவு இரக்கமின்றி கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள பழவூர் பிள்ளையார் குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன். அவருடைய மகன் ஜெயக்குமார் (32). இவருடைய பாட்டி ரீத்தாம்மாள் (80). இவர் அதே ஊரில் தனியாக வசித்து வந்தார்.

ரீத்தாம்மாளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்புள்ள வீடு இருந்தது. அந்த வீட்டை தனது பெயருக்கோ அல்லது தனது தாய் பால்கனி பெயருக்கோ எழுதி தரவேண்டும் என்று கூறி ஜெயக்குமார், தனது பாட்டியிடம் கடந்த 29–3–2015 அன்று கேட்டுள்ளார்.

அப்போது, இதுகுறித்து இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், தனது பாட்டி என்றும் பாராமல் தன்னிடம் இருந்த கத்தியால் ரீத்தாம்மாளை குத்தி கொலை செய்தார். பின்னர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பழவூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு ஜெயக்குமாரை கைது செய்தனர்.

பின்னர், அவர் மீது திருநெல்வேலி முதலாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

click me!