
திருநெல்வேலி
கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு காவலாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கைகாட்டி நிறுத்துமாறு காவலாளர்கள் கூறினர். ஆனால், அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.
உடனே காவலாளார்கள் அந்த நபர்களை துரத்திச் சென்றனர். ஆனால், அவர்கள் அதற்குள் கேரள மாநில எல்லைக்குள் சென்றுவிட்டனர். அங்குள்ள மதுவிலக்கு வாகன சோதனைச் சாவடியில் காவலாளர்கள், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கைகாட்டவே, அந்த நபர்கள் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளனர். அப்போது நிலைதடுமாறி அங்குள்ள தடுப்பு கம்பியில் மோதி இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் கீழே விழுந்தனர்.
பின்னர் தப்பி ஓட முயன்ற அவர்களை, காவலாளர்கள் பிடித்தனர். அவர்களிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் (23), அபிநவ் நாயர் (25) ஆகியோர் என்பதும், கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் , தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்றதையும் காவலாளராள் கண்டுபிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவலாளர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.