தனியார் நிறுவனங்களை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; பொறுப்பின்றி நடந்து கொள்வதாக புகார்...

First Published Feb 21, 2018, 7:53 AM IST
Highlights
Tollgate Staff demonstrated against private companies


திருச்சி

தொழிலாளர் சட்ட விதிகளை அமல்படுத்தாத, தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனங்களை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் விக்னேஷ் உணவகம் அருகில் நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய நெஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் ரிலையன்ஸ் மற்றும் ஏ.ஆர். டோல்வேய்ஸ் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ரவி பேசியது:

"தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்ட விதிகளை முறையாக அமல்படுத்துவது இல்லை.

தொழிற்சங்கம் அமைத்தவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது இயற்கை நீதி கோட்பாடுக்கு எதிரானதாகும். மேலும், இவற்றில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு வழங்கப்படுவது இல்லை.

வெளிநாட்டு நிறுவனங்கள் அரசு விதிமுறைப்படி தொழிலாளர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துவாக்குடி, பூதகுடி, கரூர் அரவக்குறிச்சி, திருமயம் லேனா விளக்கு, ஆத்தூர் தூத்துக்குடி, செங்குறிச்சி, லெட்சுமணப்பட்டி, மதுரை எலியார் பத்தி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

click me!