
தேனி
பிளாஸ்டிக் பைகளால் நிரம்பி கிடக்கும் பெரியகுளம் தீர்த்த தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை செல்லும் சாலையில் தீர்த்த தொட்டி உள்ளது. அதன் அருகிலுள்ள ஆற்றிலிருந்து குழாய் மூலம் இந்தத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
இங்கு, ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். ஆனால், வறட்சி காரணமாக கடந்த 10 மாதங்களாக தீர்த்த தொட்டி வறண்டு கிடக்கிறது. மேலும், மண் மேவி, கற்கள் பெயர்ந்துள்ளது.
அண்மையில் பெய்த மழையால், நீர்வரத்து ஏற்பட்டு தொட்டியில் தண்ணீர் நிறைந்துள்ள நிலையில், இப்பகுதியினர் சாராயம் குடித்துவிட்டு பிளாஸ்டிக்-ஐ இங்கு எறிந்துவிட்டுச் செல்கின்றனர்.இதனால், தொட்டித் தண்ணீரில் பிளாஸ்டிக் பைகள் தேங்கி மாசடைந்து வருகிறது.
சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால், இந்த குளத்தில் நீச்சல் பழகும் இளைஞர்கள் தொற்று நோயால் பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே, "குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பைகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.