
கரூர்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க மாற்றுக் கட்சியினருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டிகே.ரங்கராஜன் கேட்டுக் கொண்டார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை குமாரபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிகே. ரங்கராஜனின் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.25 இலட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.
இதனைத் திறந்து வைத்தார் டி.கே.ரங்கராஜன். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
“மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து தனிமனித சுதந்திரத்தில் மோடி அரசு தலையிடுகிறது. இதனால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் தமிழகத்திலும் அசாதாரண சூழ்நிலையே உள்ளது.
ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் என திருமாவளவன் கூறியிருப்பது அவரது சொந்த விருப்பம்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக விடியோ வெளியானது. இதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க மாற்றுக் கட்சியினருக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் பேசினார்.