
கரூரில் சாலையில் இருபுறங்களிலும் மணல் லாரிகள் அணிவகுகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் பெட்டைவாய்த்தலையில் காவிரி ஆற்றுப் பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரியில் மணல் ஏற்றிச் செல்ல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் லாரிகள் வந்து செல்கின்றன.
இந்த லாரிகள் அனைத்தும் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலைச் சுங்க கேட் பகுதிகளில் இருந்து திருச்சி மாவட்டம் பெட்டைவாய்த்தலை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்படுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட மருதூரைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் ராஜமோகன் மற்றும் காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சாலையில் நின்ற லாரிகளை ஒழுங்குப்படுத்தி வாகன நெரிசலை சீரமைத்தனர்.
இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். மக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.