
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள பேட்ரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பச்சையப்பா (70). இவருடைய மனைவி சாலம்மாள் (60). இவர் கடந்த 14–ஆம் தேதி ஒப்புராணி காப்புக்காட்டில் கழுத்தை அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக அஞ்செட்டி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலைக்குப் பிறகு சாலம்மாளின் கணவர் தலைமறைவானார். எனவே, இந்தக் கொலையை அவர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்செட்டி அருகே நூறுஒந்து சாமி மலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பச்சையப்பா பிணமாக கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில், பச்சையப்பாவுக்கும், சாலம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்ததும், காவலாளர்களின் விசாரணைக்கு பயந்து பச்சையப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டதும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள், பச்சையப்பாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாகவும் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.