
சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் அதிகாலை 4 மணி அளவில் தீப்பிடித்தது. 7 மாடிகளைக் கொண்ட இத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. கட்டடத்தின் முன்பக்கச் சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், மீ்ட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள், 200க்கும் அதிகமான வீரர்கள் பலநாட்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜா கட்டர் எனப்படும் கருவியைக் கொண்டு கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கான செலவை சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜா கட்டர் இயந்திரத்தின் ஓட்டுநர் மீது கட்டட இடிபாடுகள் விழுந்ததால் இடிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் இரண்டு நாட்களில் முழுமையாக இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.