ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் இருந்த கடைகள் அகற்றம்! மதுரை கோயில் தீ விபத்து எதிரொலி!

First Published Feb 20, 2018, 11:24 AM IST
Highlights
Shops at Rameshwaram Temple were removed


ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் இயங்கி வந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக, ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இது அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.  கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள வீரவசந்தராயர் மண்டமும் அங்கிருந்த கடைகளும் எரிந்துபோயின.

இந்த தீ விபத்துக்கு கோயிலுக்குள் கடைகள் அனுமதிக்கப்பட்டதே காரணம் என்று கூறப்பட்டது. இதனால் கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கியது. கோயிலில் இருந்த கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த கடையின் மூலம் தீ விபத்தை ஏற்பட்டதை அடுத்து, தற்போது, ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் இருந்த வந்த கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பாதுகாப்பு கருதி, கோயில் பிரகாரங்களில் இருக்கும் கடைகளை அகற்ற அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 

ராமாயாணம் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் இருந்து வருகின்றன. இந்த கடைகளை கோயிலின் பாதுகாப்பு கருதி ஒரு வார காலத்துக்குள் அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு கோயில் நிர்வாகம் கடந்த வாரம் நோட்டீஸ் கொடுத்தருந்தது.

அதன்படி, ராமேஸ்வரம் கோயிலின் மேற்கு கோபுர வாயில் மற்றும் மூன்றாம் பிரகாரத்தின் மேற்குப் பகுதியிலும் இருந்த 44 கடைகள் நேற்று மாலை மூடப்பட்டது. தொடர்ந்து கடைகளை காலி செய்யும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றன

click me!