
கொச்சி அருகே நடுக்கடலில் கப்பல் மோதிய விபத்தில், விசைப்படகு உடைந்து 3 மீனவர்கள் உயிரிழந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பயணிகள் கப்பல் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தம்பிதுரை. மீனவர். நேற்று இரவு தம்பிதுறை உள்பட 8 பேர், விசை படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கேரள மாநிலம் கொச்சிக்கு தென்மேற்கே 55 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல், மீன்பிடி படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படகில் இருந்த 8 மீனவர்கள் காயம் அடைந்தனர். மீன்பிடி படகில் நீர் புகுந்ததால் கடலில் மூழ்க தொடங்கியது.
அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற மற்ற மீனவர்கள் சிலர், கடலில் தத்தளித்து கொண்டிருந்த 8 பேரை மீட்டனர். பின்னர், கொச்சி துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள், படுகாயமடைந்த மீனவர்களை பரிசோதைனை செய்தபோது, தம்பிதுரை உள்பட மீனவர்கள் 3 பேர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக கொச்சி மாநில கடலோர காவல் படையினர், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கப்பலை தேடி வருகின்றனர்.