
தேனி மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியை ஒட்டியுள்ளது தேவாரம். இக்கிராமத்தில் விவசாயமே பிரதானத் தொழில்.நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. இதற்கிடையே மலைப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், போதிய உணவின்மையாலும் இக்கிராமத்திற்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுவது வழக்கமாக உள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் யானை புகுவதை தடுக்க அகழிகளோ மின்சார தடுப்பு வேலிகளோ தேவாரம் கிராமத்தைச் சுற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இன்று அதிகாலை இக்கிராமத்திற்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தன.
நேராக குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள் அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கியது. இதில் 12 வயதுடைய சிறுவன் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த வனத்துறையினர் காட்டுயானையை விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டு யானைகள் தாக்கியதால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.