
தமிழகத்தில் ஒரு போதும் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்றும், 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதனைகள் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாட்ர்.
மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை அண்ணா சிலை முன்பு அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய அவர். மாட்டு இறைச்சி மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் ஆளும் கட்சி தவிர ஏனைய அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றுள்ளன என குறிப்பிட்டார்
குமரி முதல் இமயம் வரை பாஜகவின் வகுப்புவாதத்தை எதிர்க்கவும், பல்வேறு சமூக அமைப்புகளும் அணி திரண்டுள்ளன என தெரிவித்த ஜி.ஆர். ,தமிழகத்தில் ஒரு போதும் பாஜக கால் ஊன்ற முடியாது என தெரிவித்தார்.
3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதனைகள் எதுவுமே இல்லை என்றும். மக்களை திசை திருப்புவதற்காகவே, மாட்டு இறைச்சி மீதான தடையை கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
விலங்குகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது, வாங்கக் கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால் மாட்டு இறைச்சி தடை என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அது விவசாயிகளுக்கும், கிராமப்புற பொருளாதாரத்திற்கும் எதிரானது என கூறினார்.
விலங்கு வதை தடை சட்டம் என்பது மத்திய, மாநில பட்டியலில் உள்ளது. கால்நடை பாதுகாப்பு என்ற பெயரில் மாநில அரசின் விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டாமா? என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.