
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலேசியா சென்ற போது அவரை நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்,பி.க்கள் மூலம் கேள்வி எழுப்பப்டும் என தெரிவித்தார்.
கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது, வைகோ மலேசியா சென்றபோது அந்நாட்டு அரசு அவரை திருப்பி அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்க முதலமைச்சர், இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டனம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் வைகோ பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியதையடுத்து, அவரை மலேசியாவுக்குள் நுழைய தடை விதித்தது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து, எம்பிக்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றும் எடப்பாடி தெரிவித்தார்.
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அமைச்சர் உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பேசி இருப்பது குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அவர்கள் ஆர்வக் கோளாரில் இப்படி பேசி வருவதாக தெரிவித்தார். மேலும் தங்கள் தொகுதிக்கு என்ன வேண்டும் என கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறினர்.