
சென்னை எண்ணூரில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இதனால், அரியவகை மீன்களும், இராட்சத ஆமைகளும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து எரிவாயு ஏற்றி கொண்டு புறப்பட்ட கப்பலும், எதிரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும் நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதலில், கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால், கடல் நீர் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்களான மீன்கள், கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல, மாமல்லபுரம் கடற்கரையில் கடல் வாழ் உயிரினங்களான அரியவகை மீன்கள் மற்றும் ஆமை நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
இவற்றை சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் பார்த்து சோகம் அடைந்தனர். இறந்து கரை ஒதுங்கும் மீன்களை அப்புறப்படுத்தாததால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து கொக்கிலமேடு மீனவர் கூறுகையில்: “கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் மீன்களை மக்கள் வாங்குவதில்லை. எண்ணெய் பாதிப்பால் மீன்கள் இறந்திருந்தால் அவை கருப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான மீன்கள் அனைத்தும் கடலுக்குள்தான் இருக்கும். சில மீன்கள்தான் தண்ணீரின் மேல் பரப்பில் வந்து உலாவும். அவ்வாறு வரும் போது இறந்திருக்காலம். மேலும், இரு கப்பல்களின் அலட்சியத்தாலே அரியவகை மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்துள்ளன. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்” என்றுத் தெரிவித்தார்.