
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“வறட்சி நிவாரணத் திட்டம் 2016–17–ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 500 ஏக்கர் நிலத்தில் தீவனச் சோளம் பயிர் செய்ய 50 சதவீதம் மானியம் வழங்கிட தமிழக அரசு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இறவைப்பாசனம் உள்ள ஒரு ஏக்கர் நிலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நிலத்தை தயார் செய்வது, உரமிடுதல், விதைகள் கொள்முதல் மற்றும் விதைத்தல் தொடர்பான ஒரு ஏக்கருக்கு உரிய செலவு ரூ. 4 ஆயிரத்தில் 50 சதவீதம், அதாவது ரூ. 2 ஆயிரம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு விதைகள் விதைக்கப்பட்ட 3 வாரங்கள் கழித்து கால்நடை பராமரிப்பு துறையால் வழங்கப்படும்.
விதைகள் விதைக்கப்பட்ட 50 நாள்கள் கழித்து தீவனச் சோளப்பயிரை அறுவடை செய்து, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்திக் கொள்ளலாம்
சுயத்தேவைக்கு மேல் உள்ள பசுந்தீவனத்தை தேவை உள்ள சக விவசாயிகளுக்கு விற்பனையும் செய்து கொள்ளலாம்.
எனவே, வறட்சியால் ஏற்பட்டுள்ள பசுந்தீவன தட்டுப்பாட்டை போக்கிடும் வகையில் குறுகிய கால பசுந்தீவன சோளத்தை பயிரிட்டு, பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்தசெ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.