மதத்தின் பெயரில் பகைமை ஏற்படுத்தினால் நடவடிக்கை... சங்கர் ஜிவால் எச்சரிக்கை!!

By Narendran SFirst Published Jan 28, 2022, 4:31 PM IST
Highlights

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, கீழ்ப்பக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் என்பவர் தன்னுடைய ட்விட்டரில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும் அந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், உள்ளதால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கானது புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து வினோஜ் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல். உட்பட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளைத் திரித்தும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது  கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!