
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவுடன் காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் கைகோர்த்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் சில கட்சிகளை இழுக்க முயற்சி செய்து வருகிறது. இது தவிர வரும் தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தவெக அதிமுகவுடன் கூட்டணியில் சேருமா? இல்லை தனது தலைமையில் கூட்டணிக்கு அமைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற மாபெரும் கட்சிகளே கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சீமான், ''சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இதுமட்டுமின்றி 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவோம்.
அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாங்கள் தான். இறைவன் ஆணையாக யாரிடமும் கூட்டணி கிடையாது. எக்காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். முடிந்தால் பாஜக தனியாக போட்டியிட்டு என்னுடன் அதிகமாக வாக்குகள் வாங்கிக் காட்டட்டும். திமுகவால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா?
விஜய்யை விமர்சிக்கவில்லை
நாங்கள் திமுகவை எதிர்த்தால் பாஜக, ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்கிறார்கள். பாஜகவை, அதிமுகவை எதிர்த்தால் திமுகவின் பி டீம் என்று கூறுகிறார்கள். தவெகவில் தம்பி விஜய் மீது கேள்விகளை தான் வைக்கிறோம். ஆனால் விமர்சனம் என்று சொல்கின்றனர்'' என்று தெரிவித்தார். திமுக, அதிமுக என்ற திராவிட அரசியலுக்கு மாற்றாக தமிழ் தேசியம் என்ற அரசியலை கையில் எடுத்து ஓரளவு வெற்றி பெற்றவர் சீமான்.
8% வாக்குகளை பெற்ற நாம் தமிழர்
சீமானின் கருத்துகளால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் சென்றனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு 8% வாக்குகளும் கிடைத்தது. கட்சி தொடங்கியது முதல் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காத சீமான், இம்முறையும் தனித்தே போட்டி என்று கெத்தாக அறிவித்துள்ளார். நாம் தமிழருக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளதால் திராவிட கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் நாம் தமிழருக்கா? இல்லை தவெக கட்சிக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது.