அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி வேண்டும்… ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த கடிதம்!!

By Narendran SFirst Published Nov 23, 2021, 9:40 PM IST
Highlights

மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் ஆட்சியருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு திருவள்ளூர் ஆட்சியருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பெரியகளக்காட்டூர் பகுதியை சேர்ந்த சுந்தரவேலு என்பவர் பெரியகளக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி தலைவர் மற்றும் வங்கிசெயலாளர் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதை அடுத்து தனது புகார் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் படி தகவல் அறிய மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதை அடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நான் 22/04/2020 மற்றும் 22/06/2020 கடந்த வருட பதிவு தபாலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி பெரியகளக்காட்டூர், வங்கி தலைவர், வங்கிசெயளர் மீது அளித்த புகார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் புகார் குறித்து தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 யின் படி 05 / 05 / 2021 இந்த வருடம் இன்று வரையில் தங்களுக்கு மேல்முறை யீட்டு மனுக்கள் தவறாமல் செய்து வருகிறேன். தபால் மூலம் எனக்கு சான்றிட்டு வழங்க கேட்டதற்கு உதாரணமாக நகை கடன் எத்தனை பேர் பெற்ற விவரம் கூட அலுவலகத்தில் இல்லை என்றீர்கள்.

எனவே நான் தங்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரி யார் என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கவும் இது போன்ற தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனையாக மனுதாரர்கள் செருப்பால் அடிக்க சட்ட அமைச்சகதுக்கும் சுப்ரிம் கோர்ட்க்கும் பரிந்துரை செய்ய தங்களை  பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதிகாரிகளை செருப்பால் அடிக்க அனுமதி கேட்டு எழுதப்பட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!