தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் அரசு பணியாற்றுவது இப்படி தானா? முறைகேட்டிற்கு பின்னனியில் இருப்பது யார்.? சீமான்

Published : Oct 17, 2023, 07:02 AM IST
தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் அரசு பணியாற்றுவது இப்படி தானா? முறைகேட்டிற்கு பின்னனியில் இருப்பது யார்.? சீமான்

சுருக்கம்

சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

சுங்கத்துறை தேர்வில் முறைகேடு

சுங்கத்துறை பணித்தேர்வில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநில   இளைஞர்களை விசாரணை முடியும் முன்பே அவசரம் அவசரமாக பிணையில் விடுவித்துள்ளது பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுங்கத்துறை பணித்தேர்வில் தேர்வு நடத்தும் அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நிலையில்,

விசாரணை முழுமையாக முடியும் முன்னே முறைகேட்டில் ஈடுபட்டவர்களை அவசரம் அவசரமாகப் பிணையில் விடுவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது. சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கடந்த 14.10.23 அன்று எழுத்தர், ஓட்டுநர், உதவியாளர்கள் எனப் பல்வேறு சுங்கத்துறை பணிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,

 நீட் தேர்வு- சோதனை

தமிழ்நாடு தவிர உத்திரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏறத்தாழ 1600 தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் 30 தேர்வர்கள் தொலைதொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியும், ஆள்மாறாட்டம் செய்தும் முறைகேட்டில் ஈடுபட்டது தமிழ்நாட்டு இளைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியரைக் காதணி உள்ளிட்ட அணிகலன்கள் முதல் உள்ளாடை வரை கழட்டச் சொல்லி அவமானப்படுத்தித் தேர்வில் தோல்வியுறும் அளவிற்கு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொடுமைப்படுத்திய நிலையில், வட மாநில தேர்வர்களை மட்டும் எப்படி எவ்வித சோதனையும் இன்றி முறைகேடாகத் தேர்வெழுத அனுமதித்தனர்? தேர்வினை நடத்தும் அதிகாரிகளே முறைகேட்டிற்குத் துணைபோனது எவ்வாறு? 

மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்

அஞ்சலகம், தொடர்வண்டித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகப் பணியிடங்களிலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், திருச்சி மிகுமின் நிறுவனம், ஆவடி கனரகத் தொழிற்சாலை உள்ளிட்ட தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும், நீட் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகளிலும் பெருமளவு வடமாநில இளைஞர்களே வெற்றி பெறும் நிலையில் அவை யாவும் இத்தகைய முறைகேட்டின் மூலம்தானோ என்ற ஐயம் வலுக்கிறது. தேர்வு நடத்தும் அதிகாரி உட்பட பலர் வட மாநில தேர்வர்களுக்கு ஆதரவாக முறைகேட்டில் ஈடுபட்ட நிலையில், இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? எத்தனை ஆண்டுகளாக இத்தகைய முறைகேடுகள் நடைபெறுகிறது? 

வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வந்து முறைகேடு செய்யும் அளவிற்கு எப்படி துணிச்சல் வந்தது? அவர்களை வழிநடத்துவது யார்? இதற்கு முன் இவ்வாறான முறைகேட்டின் மூலம் வெற்றி பெற்றுப் பணியில் அமர்ந்தவர்கள் எத்தனை பேர்? அதனால் தங்கள் சொந்த மண்ணில் பணி வாய்ப்புகளை இழந்து எதிர்காலத்தைத் தொலைத்த தமிழ்நாட்டு இளைஞர்கள் எத்தனை பேர்? இவற்றையெல்லாம் பற்றி விரிவான நேர்மையான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விடுவித்துள்ளது வடநாட்டு முறைகேட்டு கும்பலைக் காப்பாற்ற நடைபெறும் மிகப்பெரிய சதிச்செயல்தான் என்று தமிழ்நாட்டுத் தேர்வர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

விசாரணை நடத்திடுக

ஆகவே, நடைபெற்று முடிந்த சுங்கத்துறை பணித்தேர்வினை உடனடியாக ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து விரைந்து மேல் முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கு நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வெழுதி மோசடி.! ஐடியா கொடுத்தது யார்.? பிடிபட்ட வடமாநிலத்தவர்கள் தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!
சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி