
கணவரைப் பார்ப்பதற்காக பரோலில் வெளியே வந்த சசிகலா, மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு ஜெயலலிதா, ஜெயக்குமார் என்று பெயர் சூட்டியுள்ளார். பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்றும், ஆண் குழந்தைக்கு ஜெயக்குமார் என்றும் சசிகலா பெயர் சூட்டினார்.
தாம்பரம் அடுத்த மேடவாக்கம் அருகே உள்ள குலோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனைப் பார்ப்பதற்காக, ஐந்து நாட்கள் பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.
பரோலில் வெளிவந்த சசிகலா, இன்று 4-வது நாளாக மருத்துவமனை சென்றார். பின்னர் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை சந்தித்தார். சசிகலா பரோலில் வெளிவந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் மருத்துவமனை சென்று நடராஜனை சந்தித்து வருகிறார்.
நடராஜனுக்கு ட்ராக்கியோடமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அவரால் பேச இயலாத நிலை இருந்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளை சசிகலா செய்வதாக தெரிகிறது.
சசிகலா மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம் அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு தவறாமல் வந்துவிடுகின்றனர். சசிகலா இன்று மருத்துவமனை செல்லும்போது, அவரை பார்க்க, தங்கள் கைகளில் இரண்டு குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு தம்பதியர் சசிகலாவை நோக்கி வந்தனர்.
அவர்களை அருகில் அழைத்த சசிகலா, குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக கைகளில் வாங்கி முத்தமிட்டார். குழந்தைகளுக்கு தம்பதியர் பெயர் வைக்க வேண்டும் என்று சசிகலாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்றும், ஆண் குழந்தைக்கு ஜெயக்குமார் என்றும் பெயர் சூட்டினார். பின்னர் அவர்களிடம் விடை பெற்ற சசிகலா காரில் ஏறி தி.நகர் இல்லத்துக்கு புறப்பட்டார்.