அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்க போவதாக சசிகலா அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில் அதிமுக தொண்டர்களை சந்திக்க தேதி அறிவித்துள்ளார்.
அதிமுக மோதல்- களம் இறங்கிய சசிகலா
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சசிகலா தொடர்ந்து தெரிவித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவை ஒருங்கிணைக்கப்போவதாக அறிவித்தவர் அதற்காக களத்தில் இறங்கியுள்ளார். அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையிலை, இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் வெளியான அறிக்கையில்,
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், தென்காசி. கடையநல்லூர் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” தொடர்ந்து மேற்கொள்கிறார்.
சசிகலா பயண திட்டம் என்ன.?
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார். வருகின்ற 17-07-2024 புதன்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு தென்காசி ஒன்றியம், காசிமேஜர்புரத்திலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து தென்காசி, கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
4 நாட்கள் பயணம்
இரண்டாம் நாளாக 18-07-2024 வியாழக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு தென்காசி ஒன்றியம் பிரானூர் பார்டர் பகுதியிலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” ஆரம்பித்து தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும். பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
மூன்றாம் நாளாக 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றியம் புளியன்குடியிலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" ஆரம்பித்து வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார். நான்காம் நாளான 20-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம், நடுவக்குறிச்சியிலிருந்து "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை” ஆரம்பித்து மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
ஜாதி மத பேதமின்றி வாருங்கள்
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தில்" கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.