நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மீதான நீதிமன்ற காவலை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அரசாங்கம் என்னை கொலை செய்ய பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சட்டை துரைமுருகன் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே தென்காசி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதியில் அவர் தங்கியிருப்பதை அறிந்த காவல் துறையினர், நேரடியாக அங்கு சென்று சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட கூடுதல் நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
undefined
PANI PURI : பானிபூரி கடை வைக்க ஐடியாவா.? செக் வைத்த உணவு பாதுகாப்பு துறை- வெளியான முக்கிய அறிவிப்பு
அப்போது சாட்டை துரைமுருகன் தரப்பில், இது புனையப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக அதிமுக.வினர் பாடும் பாடலை மேற்கோள் காட்டியே சாட்டை துரைமுருகன் பேசியதாக முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நீதிமன்ற காவல் நிராகரிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரைமுருகன், திமுக அரசு அவர்களுக்கு எதிராக பேசும் நபர்களை நசுக்க நினைக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் நான் அதிமுக.வினர் பல ஆண்டுகளாக பாடி வரும் பாடலை மேற்கோள் காட்டி தான் பேசினேன். இது புனையப்பட்ட வழக்கு என்பதை எடுத்துரைத்தோம். நீதிபதி நடுநிலையோடு செயல்பட்டு என் மீதான நீதிமன்ற காவலை நிராகரித்துள்ளார்.
மேலும் தென்காசியில் நான் பதுங்கி இருந்ததாகக் கூறுகின்றனர். நான் பதுங்கவில்லை. கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு காவல் துறையினர் வழுக்கட்டாயமாக எனது காரில் ஏற்றி அழைத்து வந்தனர். மேலும் காவல் துறையினர் தரப்பில் என்னை அழைத்து வந்த ஓட்டுநர் மது போதையிலும், தூக்க கலக்கத்திலும் இருந்தார். இதனால் விபத்து ஏற்பட்டு காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. திமுகவினர் என்னை கொல்ல நினைக்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் எனது உயிருக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்தார்.