அண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள் !!

By Selvanayagam PFirst Published Jul 20, 2019, 8:20 PM IST
Highlights

ஜீவஜோதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த அண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசையை சரவணபவன் ஊழியர்கள் கண்ணீரோடு நிறைவேற்றி வைத்துள்ளனர்.
 

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிளைகளை பரப்பி ஆலமரம் மரம்போல் வளர்ந்துள்ளது ஹோட்டல் சரவணபவன். தனது கடுமையான உழைப்பால் நாடெங்கும் இந்த ஹோட்டலை வளர்த்தெடுத்தார்.

தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாத திட்டமிட்ட உழைப்பால் மிகவேகமாக தொழிலில் வளர்ச்சி கண்ட ‘அண்ணாச்சி’ ராஜகோபால் அதே வேகத்திலேயே நற்பெயரில் சரிவைச் சந்தித்தார்.

ஜீவஜோதியை பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய முயன்று, அவரது கணவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மேல்முறையீடுகள் செய்தும் தண்டனை உறுதி செய்யப்பட்டது..

இத்தனை பிரமாண்டமான சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய ராஜகோபால், எதையும் அனுபவிக்க முடியாமல் வழக்கில் சிக்கி, தண்டனை அனுபவிக்கும் நிலையிலேயே தற்போது காலமாகியுள்ளார். அவரது கடைசி ஆசையை நேற்று  நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள் அவர் உயிராக நினைத்த ‘சரவண பவன்’ உணவகத்தின் ஊழியர்கள்.


அவரது விருப்பத்தை தனது குடும்பத்தினரிடம் முன்னரே சொல்லியிருந்தாராம். அது, தான் இறந்துவிட்டால் கூட, அன்றைக்கும் சரவண பவன் உணவகங்களை திறந்து வைத்து வாடிக்கையாளர்களின் பசியாற்ற வேண்டும் என்பதுதான்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோதும் அவரது விருப்பப்படியே சரவண பவன் உணவகங்கள் அனைத்தும் நேற்று திறந்தே வைக்கப்பட்டிருந்தன.  இரவு 8 மணிக்குப் பிறகே உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற தொழிலபதிராக இருந்தாலும் வாழ்க்கையில் தோல்வியுற்ற மனிதராகியிருக்கிறார் ராஜகோபால். ஆயுள் கைதியாக உயிரை நீத்த அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள் ஊழியர்கள்.

click me!