அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடனும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடனும் கூட்டணி அமைத்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே உள்ளது. தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் இறுதிக்கட்ட பணிகளில் அக்கட்சி உள்ளது.
ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இருப்பினும், அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் பாஜாக் இறங்கியுள்ளது. அதற்கு பிடிகொடுக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார். எனவே, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை தற்போது வரை யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதேபோல், பாஜகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை இணைத்து தனியாக அக்கட்சி கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பச்சமுத்துவின் ஐஜேகே, ஜான் பாண்டியன் கட்சி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் பாஜக கூட்டணியில் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. மற்ற விவரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்த அக்கட்சி, திமுகவிடம் தேனி தொகுதியை கேட்டு பெறவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன் சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கதிரவன், “பாஜக இம்முறை தோல்வியை சந்திக்கும். தமிழகத்தில் ஃபார்வட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்.” என்றார்.
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.