
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் திராவிட சித்தாந்த ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காதது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டது தங்களது கடமையை புறக்கணித்தது போன்றது என கருத்து தெரிவித்தார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியவர்கள் மீது மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால், அதை எதிர்த்து திராவிட சித்தாந்தத்தை ஒழிக்க கூட்டம் நடத்த அனுமதி கோரி மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளார் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
எந்த மதத்திற்கு எதிராக பேசவும் நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் நீதிபதி கூறினார். “பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணங்களை உருவாக்குவதற்கான கருத்துக்களை பரப்புவதற்கு நீதிமன்றங்கள் உதவுமென யாரும் எதிர்பார்க்க முடியாது. சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் மீதும், அமைச்சர்கள் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது காவல்துறையின் கடமையை மீறுவதாகும்.” என நீதிபதி தெரிவித்துள்ளார்.
திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக கூட்டம் நடத்துவது அவரது அடிப்படை உரிமை என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால், அது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சித்தாந்தம், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துக்களைப் பரப்புவதில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் நீதிமன்றம் கருதுவதாகவும், மாறாக, உடல்நலம், ஊழல், தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்குக் கேடு விளைவிக்கும் போதை பானங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஒழிப்பதில் அவர்கள் கவனம் செலுத்தலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மிசோரம், சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார். அவரது பேசுக்கு பலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.