சனாதன சக்திகள் நாட்டை பாழாக்கும் நாசக்கார சக்திகள். அவர்களோடு யாரும் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள கூடாது. இது அதிமுகவுக்கு விடுக்கும் கோரிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணாநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா மற்றும் சனாதன சக்திகளை தனிமைப் படுத்துவோம் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய எம்.பி. திருமாவளவன், சனாதன சக்திகள் நாட்டை பாழாக்கும் நாசகார சக்திகள். அவர்களோடு யாரும் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள கூடாது. இது அதிமுகவுக்கும் விடுக்கும் கோரிக்கை. இந்தியாவிற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளோம் என்கிற ஆணவத்தில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். பாஜக கார்ப்பரேட்களுக்கானது. இந்துக்களுக்கானது அல்ல. அதானி - மோடி அமித்ஷாவின் பினாமி. கார்ப்பரேட்களுக்கு வேலை செய்யும் வேலை காரர்கள் தான் மோடியும், அமித்ஷாவும். சனாதன் என்ற வடமொழிச் சொல்லுக்கு மாறாதது என்று பொருள். இது அறிவியலுக்கு முரணானது. எதுவும் மாறக்கூடியது என்று சொன்னால் அது தான் பௌத்தம், அது தான் மார்க்சியம். பாஜக ஆட்சி மாறும். மக்கள் அதை தூக்கி எறிவார்கள். அதற்கான கால எல்லை 2024. பாஜக ஆட்சிக்கு பாடை கட்டக்கூடிய ஆண்டு 2024.
கால் இல்லாதவனுக்கு காதல் திருமணமா? பெண்ணின் பெற்றோர் ஆவேசம்
ஆனால், சனாதனம் என்பது மாறாது. பிறப்பால் பிரிக்கப்பட்ட யாரும் மாற முடியாது என்பதுதான் வர்ணம். மனு தர்மம் எங்கே உள்ளது என்று ஒருவர் கேட்கிறார். இந்திய சமூக கட்டமைப்பு 100 விழுக்காடு சனாதத்தின் மீது கட்டப்பட்டது. யாராலும் அக்ரஹாரத்தில் வீடு கட்ட முடியாது. எல்லோரும் இந்துக்கள் என்றால் பார்ப்பனிய திருமணமும் சக்கிலிய திருமணமும் ஒரே மாதிரி நடக்கிறதா? அப்படியெனில் இங்கே சனாதனம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்று பொருள்.
ஏன் சாதி மாறி திருமணம் செய்தால் ஆணவ கொலைகள் நடக்கின்றன? சமூக பழிக்கு அஞ்சி சொந்த பிள்ளையை கொலை செய்கிறாரகள். அவர்களை மன நோயாளிகளாக ஆக்குகிறது சனாதனம். அண்ணாமலை நீயும் இந்து நானும் இந்து என்று பேசுகிறார். மோகன் பகவத் குடும்பத்தில் போய் உங்களால சம்பந்தம் பேச முடியுமா? காரைக்குடி எச்.ராஜா வீட்டில் சம்பந்தம் பேச முடியுமா? அவரும் இந்து தானே?
பெரியாரை, அம்பேத்கரை படிக்காததால் அதை நியாயப்படுத்தும் புத்தி அண்ணாமலைக்கு இருக்கிறது. அம்பேத்கர், பெரியார் நூலை ஒரு முறை படித்து விடுங்கள். சூத்திர இந்துவாக இருக்கிற அண்ணாமலையும், பிராமண இந்துவாக உள்ள எச்.ராஜாவும் சமமில்லை என்பது தான் சனாதனம். சனாதம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் மூடர்களே, தமிழிசை கையில் ஆடையை தொடாமல் தூக்கி போட்டாரே சங்கராச்சாரியார் அங்கே இருக்கிறது சனாதனம்.
பொள்ளாட்சியில் 16 இடங்களில் குண்டு வீசுவோம்..! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு
இந்தியாவை ஆள்வதில் 10% தான் அரசமைப்பு. மீதி 90% மனு தர்மம் தான் ஆள்கிறது. சீட்டுக்காக திராவிட இயக்கங்கள் உடன் விசிக கை கோர்த்து நிற்பதாக சில முட்டாள்கள் சொல்கிறார்கள். அது சமூக நீதிக்கான இயக்கம். சமூக நீதி தான் சனாதனத்தை உடைக்கும் சம்மட்டி.
PFI அமைப்பை தடை செய்து உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை? அது என்ன ஜனநாயக இயக்கமா? இந்தியாவில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் காரணம். சங் பரிவார் அமைப்புகள் எல்லோரும் வன்முறையில் ஈடுபடவில்லையா?
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும். இந்த சனாதன சக்திகளுடன் தான் அதிமுக பாமக கூட்டணி வைத்துள்ளது. இவர்களை விரட்ட கூடிய மகா கூட்டணி தான் திமுக கூட்டணி. மீண்டும் 2024 இல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் புது அரசமைப்பை வெளியிடுவார்கள்.
எம்.ஜி.ஆரால், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும். தமிழக மக்களுக்கு துரோகம் இழக்காதீர்கள்.
சனாதன சக்திகளை தனிமைப்படுத்த காங்கிரஸ் தனித்து பாஜகவை வீழ்த்தட்டும் என்று வேடிக்கை பார்க்க கூடாது. இது ஆபத்தான நேரம். இந்த முறை எக்காரணம் கொண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது. அதிமுக, பாமக கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. சில தொகுதிகளுக்காக மக்களுக்கு துரோகத்தை செய்து விட கூடாது. ஜனநாயக சக்திகளை ஒன்றினைப்போம், சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்.