
தர்மபுரி
தர்மபுரியில் 2017–18 நிதியாண்டில் ரூ.404 கோடி கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட வங்கியாளர்கள் குழுக் கூட்டம் தர்மபுரி மாவட்டத் தொழில் மைய அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் விவேகானந்தன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
“தர்மபுரி மாவட்டத்தில் “ஸ்டேண் டப் இந்தியா” திட்டத்தின் மூலம் 25 பேருக்கும், “டிகிதன் யோஜனா” மூலம் 519 பேருக்கும் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய கடனுதவிகள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரத்து 150 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2017 – 2018–ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி வங்கிக் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த இலக்கை அடையும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும்” என்று ஆட்சியர் விவேகானந்தன் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் குப்புசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுசீலா, மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் பார்த்தசாரதி, இந்தியன் வங்கி மாவட்ட முதன்மை மேலாளர் முத்தரசன், மாவட்ட தாட்கோ மேலாளர் வைத்தியநாதன் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.