
நாகை, தஞ்சை மாவட்டங்களில் 4 ரயில்கள் பாதி வழியில் நிற்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உழவன் விரைவு ரயில் சென்னை எழும்பூர் சந்திப்பிற்கும் தஞ்சாவூர் சந்திப்பிற்கும் இடையில் இயக்கப்பட்டு வருகிறது. பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் கோட்டை சந்திப்பு, பண்ணுருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்வது வழக்கம்.
வழக்கம் போல் எழும்பூரில் இருந்து கிளம்பிய உழவன் ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குற்றாலத்தின் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
உழவன் ரயில் நிறுத்தத்தால் மேலும் 3 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆடுதுறையில் வாரணாசி ரயிலும், கும்பகோணத்தில் மைசூர் ரயிலும், மயிலாடுதுறையில் தஞ்சாவூர் பயணிகள் ரயிலும் ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் தங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.