
கன்னியாகுமரி
டெல்லி காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூ.12 இலட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தொலையாவட்டம் செம்முதல் பகுதியைச் சேர்ந்த சொர்ணப்பன் மகன் சிபு (26). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் வந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.
அந்த மனுவில், “எனது பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்குத் தெரிந்த நபர் மூலமாக ரூ.3 இலட்சம் கொடுத்தால், எனக்கு டெல்லி காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும், வேலைக் கிடைக்காவிட்டால் பணத்தைத் திரும்ப தந்துவிடுவதாகவும் எங்களிடம் கூறினார்.
இதனையடுத்து நாங்கள் அவரிடம் ரூ.3 இலட்சத்தைக் கொடுத்தோம். நான் நேரடியாக டெல்லி சென்றுப் பார்த்த போதுதான் அவர் என்னை ஏமாற்றியது தெரிந்தது.
இதேபோல் எங்கள் ஊரில் மேலும் மூன்று பேர் ஏமாற்றப்பட்டு உள்ளனர். மொத்தம் ரூ.12 இலட்சத்தை வசூலித்துள்ளார்.
எனவே, எங்களை ஏமாற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.