
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சி.பி.ஐ. முன்பு ஆஜராக மறுத்துவிட்டார்.
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அப்போதைய மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏர்செல் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5000 கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, வியாழக்கிழமை (நேற்று) ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால், இந்த சம்மனை ஏற்று சி.பி.ஐ. முன்பு ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுத்துவிட்டார். இது குறித்து அவருடைய வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியதாவது-
‘‘ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்து விட்டது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துவிட்டன. இந்த நிலையில் சம்மன் அனுப்புவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.
இந்த தகவலை சி.பி.ஐ. தலைமை நிலையத்திற்கு காலை 10.30 மணி அளவில் தெரிவித்துவிட்டோம்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத் தந்ததில் ஆதாயம் அடைந்ததாக, கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. அனுப்பிய சம்மனை ஏற்று, இருமுறை அவர் சி.பி.ஐ. டெல்லி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.