
கன்னியாக்குமரியில் மதுபோதையில் அங்கன்வாடிக்குள் புகுந்து பெண் பணியாளர்களை தாக்கிய முன்னாள் கவுன்சிலர் குழந்தைகளை வெளியேற்றிவிட்டு பூட்டு போட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட 16 வது வார்டு வடக்கு குண்டல் பகுதியில் அரசு குழந்தைகள் நல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சார்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு அப்பகுதியை சார்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மதுபோதையில் பெண் சத்துணவு பணியாளர் மற்றும் உதவி பணியாளர்களை அரசின் திட்டங்களை குறை கூறி ஆபாச வார்த்தைகளில் மிகவும் தரக்குறைவாக திட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
தொடர்ந்து குழந்தைகளை வெளியேற்றிவிட்டு அங்கன்வாடிக்கு பூட்டு போட்டுள்ளார். இதனால் பெண் பணியாளர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்று வழக்கம் போல் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் அங்கன்வாடி திறக்கப்படாமல் இருப்பதை கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின் அங்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து திறந்துவிட்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.