
மதுரை
மதுரையில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து 45 சவரன் நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இருவரை சிசிடிவி பதிவை கொண்டு காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வீரன். இவர் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி.
நேற்றுக் காலை தனலட்சுமி வீட்டில் இருந்தபோது இருவர் காரில் வந்திறங்கினர். அவர்களில் ஒருவர் காவல் ஆய்வாளர் உடையிலும், மற்றொருவர் சர்தார் சிங் உடையிலும் இருந்தாராம்.
அவர்கள் தனலட்சுமியிடம் “நாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்” என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டினர். பின்னர் அவர்கள், “உங்கள் கணவர் வீரன் எங்கள் கஸ்டடியில் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டார்,
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எனவே நீங்கள் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறியுள்ளனர். தனலட்சுமி என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த 10–ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகள் அபர்ணாவிற்கு வந்திருப்பவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் தாயாரிடம், “அப்பாவிற்கு இப்போது போன் செய்வோம். அவர் போனை எடுத்துவிட்டால் இவர்கள் போலி. அப்படி எடுக்கவில்லை என்றால் இவர்கள் உண்மையான வருமானவரித்துறை அதிகாரிகள்” என்று தெரிவித்தார்.
உடனே தனலட்சுமி போனை எடுத்து பேச முயன்றபோது, காவல் உடையில் இருந்தவர் அவர்களிடமிருந்த இரண்டு போன்களையும் பறித்துக் கொண்டு, சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பின்பு வீட்டில் உள்ள அறைகள், படுக்கையறை, கழிப்பறை ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் தனலட்சுமியிடம், “உங்களுக்கு இந்த வீட்டைத் தவிர, வேறு இரண்டு வீடுகள் உள்ளன. அவற்றை எப்படி வாங்கினீர்கள்?” என்று கேட்டு வீட்டில் இருக்கும் நகைகள், பணம் ஆகியவற்றைக் கொண்டுவருமாறு கூறியுள்ளனர்.
தனலட்சுமி பயந்துபோய், பீரோவில் இருந்து நகைகளையும், பணத்தையும் கொண்டுவந்து கொடுத்தார். அவற்றை அவர்கள் கொண்டுவந்த எலக்ட்ரானிக் தராசு மூலம் அளவீடு செய்து 45 சவரன் நகைகள் இருப்பதாகவும், பணம் 45 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் கூறினர்.
அவற்றை அவர்கள் குறித்து வைத்துக் கொண்டு, 20 நிமிடம் கழித்து நகைகள், பணம், 2 செல்போன்களை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அதன்பிறகு, தனலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து கூச்சல் போட்டார். மேலும் அருகில் இருந்தவர்களிடம் செல்போனை வாங்கி கணவரிடம் பேசினார். அவர் போனை எடுத்து பேசியபிறகு தான் தெரிந்தது, வீட்டிற்கு வந்தவர்கள் வருமானவரி அதிகாரிகள் இல்லை என்று.
உடனே து குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த துணை காவல் ஆணையர்கள் சசிமோகன், ஜெயந்தி மற்றும் காவலாளரக்ள் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்கள் அனைத்தையும் சேகரித்தனர்.
பின்பு கொள்ளையர்களை பிடிக்க நகர் முழுவதும் எச்சரிக்கைச் செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்..