
தேன்கனிக்கோட்டையில் ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறாது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் நடந்து வருகிறது. அதனை ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் உள்ளது.
இங்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு 27 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு காய்ச்சல் வந்தது. அவர் சிகிச்சைப் பெற்றும் குணமடையாததால் அவருக்கு டெங்கு, வைரஸ், மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் இருக்கிறதா? என்று மருத்துவர்கள் சோதித்தனர்.
இதில் எதுவும் இல்லை என்றபோதிலும், அவருக்குக் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அந்த இளைஞரின் ரத்தம், சிறுநீர் ஆகியவை சோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதில் அந்த இளைஞருக்கு ஜிகா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அந்தப் பகுதியில் அதிகம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் மூன்று பேர் ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்திகௌண்டனூர், என்.புதூர், நாட்றாம்பாளையம், பஞ்சல்துறை, வாஞ்சிநாதபுரம், அட்டப்பள்ளம் ஆகிய கிராமங்களில் காய்ச்சல் நோய் தடுப்பு சுகாதார பணிகள் நடந்து வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேற்றுப் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“அஞ்செட்டி தாலுகா நாட்றாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து 6 மருத்துவர்கள், 12 சுகாதார ஆய்வாளர்கள், 22 மஸ்தூர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய எட்டு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. வீடுகளுக்கு அவர்கள் நேரடியாகச் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும் நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகைப்பான் மூலம் மருந்து தெளித்தல், கழிவுநீர் கால்வாய்களை சுகாதாரமாக பராமரித்தல் போன்ற விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சச்ரிதா, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, சந்தானம் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.