
நீலகிரி
கோத்தகிரி அரவேனு பஜாரில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் இரவில் வன விலங்கு அச்சத்தில் மக்கள் நடமாடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட து அரவேனு பஜார் பகுதி. இங்குள்ள அளக்கரை வழியாக குன்னூர் செல்வதற்கு மாற்றுப் பாதை ஒன்று உள்ளது.
அரவேனு பஜார் சாலையில் அரசுப் பேருந்துகள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. மேலும், முக்கியச் சுற்றுலா மையமான கேத்ரீன் அருவியும் இப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், ஜக்கனாரை சுற்றுவட்டார கிராம மக்கள் வெளியூர் சென்றுவர வேண்டுமெனில், அரவேனு பஜாரை கடந்துதான் செல்லவேண்டும். எனவே, மக்கள் நடமாட்டமும் இந்தப் பகுதியில் அதிகமிருக்கும்.
இங்குள்ள மக்களின் நலன்கருதி, இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. சில மாதங்களே இந்த விளக்குகள் எரிந்த நிலையில் பழுது அடைந்துள்ளன.
தற்போது இந்த விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் அரவேனு பஜார் பகுதி, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் குறிப்பாக, வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்தப் பகுதியில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகளை அறிய முடியாத சூழல் இரவு நேரங்களில் ஏற்படுகிறது.
எனவே, உயர்கோபுர மின்விளக்குகளை விரைந்து சீர்ப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.