
நாமக்கல்
கர்நாடகாவில் இருந்து கேரளத்திற்கு களிமண் கடத்திய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடும் காவலாளர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுகிறது என்ற தகவல் நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்திற்கு கிடைத்தது.
அதன்படி, நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலத்திலிருந்து வந்த லாரியை பல்லக்காபாளையம் அருகே நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் முறையான அனுமதியின்றி களிமண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் விசாராணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், கர்நாடக மாநிலம், மாலூர் எனும் இடத்திலிருந்து, களிமண் பாரம் ஏற்றிக் கொண்டு கேரள மாநிலம், சாலக்குடியில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்துக்குச் சென்றதும், இதற்கான முறையான அனுமதியில்லாததும் தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் மகன் அசோக்குமார் (28), கந்தசாமி மகன் முருகவேல் (46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த குமாரபாளையம் காவலாளர்கள் களிமண் கடத்திச் செல்ல போலியான அனுமதிச் சீட்டு கொடுத்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மோகன் (எ) மோகன்ராஜை குமாரபாளையம் காவலாளர்கள் தேடி வருகின்றனர்.