
நீலகிரி
இன்று நீலகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் வருகை தருவதால் தமிழக -கேரள எல்லை பகுதிகளில் கூடுதல் காவலாளர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் நீலகிரிக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்டப் பகுதிகளில் கூடுதலாக நக்சல் தடுப்புப் பிரிவு காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மஞ்சூர் அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான கிண்ணக்கொரை, கெத்தை, முள்ளி, இரியசீகை, கோரகுந்தா, அப்பர்பவானி, நெடுகல்கம்பை உள்ளிட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
மேலும், முள்ளிகூர், மேல் முள்ளிகூர், புதூர், தனியகண்டி, கோரகுந்தா, மூப்பர்காடு, நெடுகல் கம்பை, வீரக்கம்பை, பெள்ளத்திக்கம்பை, தும்பனேரிக்கம்பை உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் காவலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.